Friday, August 27, 2010

அன்னையாய் பிறந்திட அருந்தவம் ஆற்றிடல் வேண்டும்உயிரைச் சுமக்கும் உன்னதம் அவளை கடவுள் என்பான் நாத்திகன் கூட !
உயிரும் மெய்யும் உடன் வரும் அஃகும் உறுப்பாய் உரித்த தமிழினைப் போல 
கருவில் உயிரையும் உருவில் மெய்யையையும் உளத்தில் எஃகையும் அணியாய்ப் புனைந்தவள். 
உருக்கும் இசையில் சிந்தும் அவளே !
பெருக்கும் இன்பத்தில் கந்தும் அவளே !
வெண்ணெய்த் தின்கையிலும், வெறும் வயிற்றில் துயில்கையிலும்
அன்னையுந்தன் அதட்டல் சத்தம்
முன்னுக்குப்பின் முரணாய் இருக்கும்.
உண்ணும் பருக்கையில் எல்லாம் உன்முகமே தெரியுதம்மா !
உப்பும், புளி மிளகும் கலந்த ருசி - உன் உள்ளங்கைக்கு உரியதம்மா ! 
ஏழு மலைத் தங்கங்கள் இழந்தாலும் பெரிதில்லை 
அன்னை உந்தன் அரவணைப்பில் ஆறுதல் கிடைத்துவிட்டால் - 
ஆயிரம் சொர்க்கங்கள் காலடியில் கிடக்குமம்மா !
சுட்ட பால் குவளை தொட்டுவிட்டேன் சிறுவயதில் 
எட்ட நின்றிருந்த நீயதனைப் பார்க்கவில்லை. 
சுட்டு விரல் தனிலே கொடும் சூட்டை உணர்ந்தவுடன்   
கத்தி அளப்பரித்தேன், அழுகையிலே உனையழைத்தேன்.  
உயிரினை இழக்கும் வலி உன்கண்ணில் பார்த்திட்டேன், 
நீ துடித்த துடிப்பினிலே என் வலியை மறந்திட்டேன். 
தீக்குழம்பை குடிதாற்போல் நீ துடித்த அந்நொடிகள்
நினைத்தாலும் வலிக்கிறது, இருந்தாலும் இனிக்கிறது...
"பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா" என்றான் பாரதி,
இப்பிள்ளைக்கு கனியமுதே என்அம்மா  -
தீந்தமிழின் தீராக் கவிகளிலும், வற்றா வரிகளிலும் 
உனை வர்ணித்துப் புகழ்ந்தாலும் பத்துமா பதங்கள் 
என் பத்திரை மாற்றுத் தங்கமே உனை வாழ்த்த?
கருப்பை எனக்கிருந்தால் மறுமையில் உன்னை ஈன்றிருப்பேன்,  
ஆணாய்ப் பிறந்ததினால் அப்பலனும் எனக்கில்லை !
இம்மைப் பிறப்பினையும் குறையுரைக்க ஏதுமில்லை - ஏனெனில்
குருதிப் பாலையும் தசையுள்ள தலையணையும் 
உன்மடியில் கண்டதனால் உன்னதமே இப்பிறப்பும் !

Monday, August 16, 2010

இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart )


செத்ததடி என் நெஞ்சம்
பித்தனாய் உன் பின்னே அழைந்ததும்,
மெத்த நறுமண சோலைக்குள்
முத்தக்காடாய் உன் கன்னம் ஆக்கியதும்,
எத்தனை முறை நினைந்திருப்பேன்!
அத்தனையும் பொய்யோடி ?
தத்தையுனக்குத் திருமணமாம் - உன்
அத்தையவள் உரைக்கக் கேட்டேன். 
மத்தை தயிரில் கடைந்தது போல் 
சித்தம் முழுதும் கலைந்ததடி - உடல் 
இரத்தம் கணத்தில் உறைந்ததடி
இத்தனை பொழுதும் இசைந்த காதல்
நித்தமும் நிறைவாய் மிளிர்ந்த காதல் 
தத்தனை மறந்து உயிர்த்திடுமோ ?
ஒத்த நினைவுகள் மறத்திடுமோ ?
கொத்து மலர்களை அடைந்த வண்டாய் - உல
கத்தை மறந்து லயித்த மனம் - மடிய 
நைத்ததடி உன் மணநாள் செய்தி...
வைத்த விழி கலையாமல் உன்னழகை 
ருசித்த தளிரிதயம் - இன்று குற்றூசி 
தைத்த கொடுவலி யுணர்ந்ததடி 
வித்தகியென்றே உனை வியந்துரைப்பேன் செல்லமாய்-இன்று 
வித்தாகி விட்டாயோ நம்மின்னுறவை மற்றோனுக்கு ?
குத்தமுனையுரைக்க ஒப்பவில்லை மனம் - எனினும் 
சுத்தக் குருதியில் தீச்சாறு கலந்தாற்போல் - இம்மையின் 
மொத்த வினை வலியும் ஒருசேர்ந்தெனை கொல்லுதல் உணர்வாயோ ?

Sunday, August 15, 2010

காதல் கவி ( Poet for Love )

காதல் கவி எழுதிட கரமிரண்டும் துடிக்குதடி 
மனம் ஏனோ மறுக்கிறது 
கசங்கும் காகிதத்திலா கண்மணியின் கவியென்று...
உயிரில் எழுதிடவோ ? உத்தரவு நான் கேட்டேன் 
மனம் ஏனோ மறுக்கிறது
பிரியும் உயிரிலா பிரியமானவளின் கவியென்று...
உடலில் எழுதிடவோ ? உத்தரவு நான் கேட்டேன்
மனம் ஏனோ மறுக்கிறது
எரியும் உடலிலா என்னவளின் கவியென்று...
கண்ணில் எழுதிடவோ ? 
கண்ணீர் வந்தழித்திடுமே !
விண்ணில் எழுதிடவோ ?
மேகம் வந்து மறைத்திடுமே !
மண்ணில் எழுதிடவோ ?
மகத்துவம்தான் குறைந்திடுமே !
எழுதுகோல் உயிர் நீத்ததடி 
என்னிலை காணச் சகியாமல்...

Saturday, August 7, 2010

திரிபு ( Distortion )

ஆரத் தழுவி 
முத்தம் பகிர்ந்து 
அங்கம் அளந்து
இதழ் வருடி 
சிகை கோதி 
நகை ரசித்து 
கரவிரல்கள் இருபதும் இறுகக் கோர்த்து 
காதல் பதங்கள் ஆயிரம் மொழிந்து 
இன்தமிழில் செவ்வழகை ஒப்பனை பெருக்கி வர்ணித்து 
இல்லறத்தில் இன்பம் காணும் ஒவ்வொரு நொடியிலும் எங்கோ ஓர் மூலையில் எட்டிப் பார்க்கும் முன்பு உதிர்ந்த காதலின் நினைவுகள் - முள் நீக்கிய பின்பும் பாதம் கொள்ளும் சிறு வலி போல்...

Wednesday, July 28, 2010

காதல் தோல்வி ( Kathal tholvi )

காற்றில் விதை தூவி
வெந்நீர் தனை ஊற்றி 
பஞ்சு வேலியிட்டு
நெஞ்சில் உரமிட்டு
பார்த்து வளர்க்காது 
உயிர் சேர்த்து வளர்த்த பயிராம் - காதல் 
இதில் மன்னவரும் மகுடமிழக்க 
விண்ணவரும் வீண் பகை சுமக்க 
பின்னவராய் நாம் மட்டும் என்ன விதி விலக்கோ ?
மனக்காதல் மணக்காததால்
மணக்காது போகும் பெண்ணை 
கண்கள் இமைக்காமல் கண்ட 
நிலைக்காதல் நினைக்காது நீக்கிடுமோ ?
நெஞ்சு பொறுக்குதில்லையே 
நம் உயிரென நினைந்தவள் உதறிடும்போது....
புற்றரவு தீண்டிடினும் 
கொடும் நஞ்சு சுவைத்திடினும்
மனம் பெற்றிடுமோ உற்ற உன்னை இழந்த வலி ?
இறக்கும் வரை இவ்வலியை இழி மரணமும் கொணர்வதுண்டோ? 
இறந்தாயினும் ஓர் வழியில் இரு மனமும் புணர்வதுண்டோ?
என்னை இறத்து உன்னை மறக்க 
உன் நினைவை மண் புதைக்க
கோழை போல் இறக்கமாட்டேன்...
கொண்ட உயிர் துறக்கமாட்டேன்...Wednesday, July 21, 2010

தமிழிசை ( Tamilisai )


போதி னிதழு மிசையூ தலில் விரிந்திட !
காதின் மடலு மசையா தலில் மகிழ்ந்திட !
வாதி னுடலி லசைந்தாடிடும் கொடியேன - உளம்
தீதின் பிரிவை வசை பாடி நெகிழ்ந்ததுவே !


( பொருள் விளக்கம்: போது - மலரும் நிலையிலுள்ள மொட்டு, அத்தகைய மொட்டானது தமிழின் இசையை கேட்டு இன்பத்தில் விரிந்திட, காதின் மடலானது அசையாதிருந்து இசையின் லயத்தில் மூழ்கிட, தென்றல் தீண்ட கிளையின் உடலில் பிணைந்த கொடியினது (வாது - கிளை) சிலிர்த்த அசைவைப்போல் உள்ளமானது இசையை அனுபவித்து தீமையின் பிரிவை வசை பாடி நெகிழ்ந்ததுவே...)

Saturday, July 17, 2010

பிரிவு ( Pirivu )

                    
உன்னோடு நானிருந்த நாட்கள்
     விண்ணோடு நான் பறந்த நாட்கள் !
இன்னொடு இசைப் புனைந்த பாக்கள்
     தன்னோடு உனைவரைந்த தாட்கள் !
கருவிழி கரைகிற போதும்
     கசடாய் கசிந்திடும் காதல் !

                
இருவிழி இசைந்திட கேட்கின் 
     எளிதாய் கிடைத்திடும் சாதல் !
மண்ணை உடல் கலக்கும் போதும் 
     என்னை உடல் விடுத்துச் செல்லும் !
நின்னது என்னுயிர் என்று
     நின்னுயிர் எடுத்துச் சொல்லும் !


Thursday, July 1, 2010

பெண்ணுரிமை ( Pennurimai )

வெறும் ஏட்டிலும் பாட்டிலுமா பெண்ணுரிமை ?
நம்நாட்டிலும் பண்பாட்டிலும் நடைமுறையில் எங்குண்டு அவர்க்குரிமை ?

வன்கொடுமை தான்செய்யினும் வாய்திறவா பதுமையென வணங்கி நிற்கும் கற்சிலையோ?
பேருந்தின் இருக்கையிலும் பேறு விடுதியிலும் சலுகை பெற்றதுதான் அவள் நிலையோ?

உயர்ச் சாதிவெறியன் கூறுகிறான் - தாழ்ந்த சாதியில் ஆண் நாய் வளர்க்க அனுமதி இல்லையென்று !!!
எங்கள் பெண்டிர் உமக்கு நாயைவிட அற்பமோ? இழிவு ஏற்கும் சொற்பமோ?

பெண்களின் சுயவளர்ச்சி சமுகத்தின் நீசமோ?
அன்னையை நிதமும் நிந்தித்தல்தான் நீ விரும்பும் தேசமோ?
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் நற்குணங்கள் அவளை பூசிக்கவோ? இல்லை ஈசிக்கவோ?

விரல் நெட்டி முறிக்கவும், மணமெட்டி சுமக்கவும்தான் பெண் அவனியில் பிறந்தாளோ?
முட்டுக் கட்டை கட்டியவர்தம் முதுகுப்பட்டை பொடிபட எட்டி உதைக்க மறந்தாளோ?

பெண்டறிவு ஓங்குதல் கண்டு சீற்றமோ?
ஆணென்னும் ஆதிக்க உணர்வின் ஏற்றமோ?
அடிமை நாயாய் பணிந்து கிடத்தல்தான் பெண்ணினத் தோற்றமோ?

என்னில் பாதி அவளென்னும் உண்மை மனம் ஏற்குமோ?
பேசும் அஃறிணைதான் பெண்ணென்று ஓதி பேதம் பார்க்குமோ?

ஆணிற்கழகு பெண்மையை போற்றுதல் அல்லாலன்றி தூற்றுதல் என்றும் ஏற்பதற்கிழிவே.

Wednesday, June 16, 2010

அவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu )

                           சரித்திரத்தின் மீது ஆர்வம் கொண்ட அனைவருடனும் இந்த பக்கத்தை பகிர்ந்து கொள்ள விழைகிறேன். நம் விஞ்ஞானம் எவ்வளவுதான் தீரா பசியுடன் வரலாற்றுக் கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டாலும் இன்றும் நமக்கு புலப்படாத பல அதிசயங்கள் எங்கும் நிலவுகின்றன. நான் வியந்து வியந்து ரசித்து படிக்கும் வரலாறு எகிப்தைப் பற்றியது. மேலும் ரோம், கிரேக்கம், பாபிலோன், ஆப்பிரிக்க மற்றும் அரபு நாடுகள் போன்றவற்றின் வரலாறு மீதும் மிகுந்த ஈடுபாடுண்டு. 


இந்த பக்கத்தில் சில அதிசய வரலாற்று சுவடுகளையும் நினைவுகளையும் உங்களோடு பகிர்கிறேன்.

....................................................................................................................................................................மோய்(Moai)
மோய் என்பது மூதாதையர்களின் நினைவுச் சிலைகளை குறிக்கும் சொல்.ஈஸ்டர் தீவுகள் எனப்படும் கிழக்குத் தீவுகளில் இச்சிலைகள் காணப்படுகின்றன. இந்த தீவுகள் பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கு பகுதியில் உள்ளன. ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரக்கணக்கான சிலைகள் இத்தீவில் காணப்படுகின்றன. சராசரியாக 8 முதல் 10 அடி வரையில் இதன் உயரமானது அமைந்துள்ளது. மேலும் சராசரியாக 25 டன் எடை கொண்டவையாகவும் இவை அமைந்துள்ளன.  "ஜேக்கப் ரசுவின்" என்பவரின்   சுற்றுப்பயணத்தில் இந்த தீவினைப் பற்றிய அதிசய செய்திகள் வெளிவந்தன. இங்கு உள்ள மோய் எனப்படும் சிலைகள் பல ஆயரம் கிலோ எடை கொண்டவை, இதனை யார், எதற்காக, எப்படி உருவாக்கினார்கள் என்பதே அங்கு நிறைந்துள்ள மர்மங்கள். "ராப்பா நூயி" என்ற பொலிசீனியப் பெயரால் இன்று வழங்கப்படும் ஈஸ்டர் தீவு இன்றைய தினத்தில் சுற்றுலாத் தளமாக மட்டும் உள்ளது.


இங்கு காணப்படும் மலைகளில் எண்ணற்ற  மோய் சிலைகள் தீவினை நோக்கிப் புதைக்கப்பட்ட நிலையில் உள்ளன, இச்சிலைகள் தீவினை கண்காணிக்கும் நோக்கில் ஈஸ்டர் தீவு மக்களால் நிறுவப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இத்தீவின் அழிவினைப் பற்றி இப்போது காண்போம்.

இத்தீவுகளில் மீன்பிடித் தொழிலும் விவசாயமும் நன்கு நிகழ்ந்து வந்துள்ளன. இறந்த மூதாதையர்களின் நினைவாக வைக்கப்பட இச்சிலைகளை பல கிலோ மீட்டர்கள் நகர்த்துவதற்காக பல நூறு மரங்களை வெட்டி அழித்துள்ளனர், You tube வீடியோ கோப்புகளில் அச்சிலைகள் எவ்வாறு நகர்த்தப்பட்டிருக்கலாம் என்ற யூகங்கள் தெளிவாக வரையறுக்கப்படுள்ளன. இவ்வாறு பல்லாயிரம் மரங்கள் வெட்டப்பட்டமையால் வறட்சி நிலவி பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கடும் வறட்சி நிலை காரணமாக ஒருவரை ஒருவர் கொன்று நரமாமிசம் சாப்பிடும் பழக்கம் நிலவியுள்ளது. இந்த அவலம் அங்குள்ள பல உயிர்களை பலிவாங்கியுள்ளது. அதன் பின் இங்கு பரவிய அம்மை நோய் மீதி இருந்தோரையும் பலிகொண்டது. 250 டன் எடை கொண்ட ஒரு அசுர மோய் சிலை அந்த தீவிலேயே அதிக எடை கொண்ட சிலையாக கருதப்படுகிறது  இதன் உயரம் சுமார் 75 அடி.

பல்வேறு நம்பிக்கையின் சான்றாக ஓங்கி நிற்கும்

இந்த சிலைகள், ஒரு தீவின் மொத்த மக்களும்

அழிவதற்கு வித்தாக அமைந்த இச்சிலைகள்,

பலநூறு ஆண்டுகளை கடந்து நிற்கும் இந்த சிலைகள்

பொலிசீனியத்தின் இறந்த மூதாதையரின் நினைவாக

நிறுவப்பட்டதா? இல்லை ராப்பா நூயி மக்களின்

அழிவிற்கு முன்னோடியாக நிறுவப்பட்டதா?


இயற்கை என்னும் மர்மக் காட்டில் இரையின் தேடல்....

                                                                                                                   (தேடல் தொடரும்)    

Friday, May 28, 2010

மனம் ( Manam )

அன்னை மடி
திண்ணை தூக்கம்
எண்ணெய் குளியல்
நிலா சோறு
விழா ஆட்டம்
கொல்லை மாடு
விட்டத்து ஊஞ்சல்
பம்பரக் கயிர்
பனங்காய் வண்டி
தீப்பெட்டி ரயில்
சுதந்திர தின மிட்டாய்
பிறந்த நாள் பலூன்
காகிதக் கப்பல்
மை பேனா
மயில் இறகு
மரக் கதவு
மண் வீடு
பாட்டியின் கதை
தாத்தாவின் தடி
இவற்றுள் எங்கு தொலைந்தது என் பிள்ளை மனம்.

Thursday, April 29, 2010

உறக்கம் ( Urakkam)

கருமை சுமந்த இரவு,
குளிர் சுமந்த காற்று,
ஒப்பனையில்லா அம்புலியின் அழகு,
தெளிவில்லா தெருவிளக்கின் ஒளி,
கம்பளியின் அரவணைப்பு,
தாய்மடியாய் தலையணைகள்,
அத்தனையும் ரசித்தபடி
கண்ணில் வரும் உறக்கம்
மண்ணில் இருளருளிய சுவர்க்கம் !

தமிழெந்தன் தாய் ( Tamil Enthan Thaai)தமிழுக்கு இதமென்று பேர் !
இன்பத் தமிழெந்தன் இதயத்தில் இரக்கத்தின் தூண் !

 தமிழுக்கு சேய் என்று பேர் !
அன்னைத் தமிழ் இந்த குழந்தைக்கு அமுதூட்டும் தாய் !

தமிழுக்குக் கனியென்று பேர் !
அன்புத் தமிழ் எங்கள் கவிதைக்குப் பசிதீர்க்கும் ஊண் !

தமிழுக்கு இசையென்று பேர் !
சங்கத் தமிழெந்தன் குரலுக்கு ஒலிமீட்டும் நாண் !

 தமிழுக்குச் சுடர் என்று பேர் !
வளர்த் தமிழெங்கள் அறியாமைக் குளிருக்குத் தீ !

 தமிழுக்குப் புனல் என்று பேர் !
செந்தமிழெங்கள் வறட்சிக்கு கார் தந்த நீர் !

தமிழுக்குக் கொடையென்று பேர் !
தொன் தமிழெங்கள் கருத்துக்குப் பதம் தந்த கோன் !

தமிழுக்கு மதியென்று பேர் !
கன்னித் தமிழெங்கள் இருளுக்கு ஒளிதந்த கோள் !

Monday, April 26, 2010

விடியல் ( Vidiyal )

பச்சைப் புல்வெளி
ஆங்கே பரவிய பனித்துளி!
மிடிமையிடத்து மீண்ட வெள்ளொளி!
அடிமையறியா பறவையின் பாட்டொலி!
பரிதியின் படுக்கையாய்
பரந்த பேராழி!
விடியலின் வினோதங்கள்
விரியுலகில் எத்தனை ஆயிரங்கள்!

Saturday, April 24, 2010

இரக்கம் ( Irakkam )

இறந்தவர் தேகம் இடுகாடு செல்லும்முன் 
இரக்கமின்றி மறக்கும் மனம் - இதில் 
அன்பென்றும், காதலென்றும் வெளிப்பூச்சுகள் 
துருக்களை மறைக்கும் தூரிகைகளோ!
துன்பங்கள் துளிர்க்க ஈரமில்லா இதயங்களில் 
இன்பங்கள் மட்டும் இறக்கும்வரை இருந்திடுமோ! 

இழப்பு ( Izhappu )

  கானல் நோக்கி தாகத்துடன் பயணம்
         நாணலாய் இருந்த வாழ்க்கை துறந்து

Friday, April 23, 2010

மழை ( Mazhai )

"இருட்டிய வானம்
 திரட்டிய துளிகளை 
 உருட்டி தெளிக்கிறது 
 அட்சதையாக!"

மதி ( Mathi )


           "அரைத் திங்கள் வளரினும்
            அரைத் திங்கள் குறையினும்
            வீசும் ஒளியில் மாசில்லா கவிஞர்களின் ரதி - இவள்
            புவிக்கு ஞாயிறுவின் இரவு பிரதி!"

வெறுமை ( Verumai )

"வெறுமை சுமந்த உள்ளத்தின் கவிதை
                                        வெற்றுக் காகிதம்!"

வலைப்பூ ( Blog )

மனமிடத்து மலர்ந்த கவிகள் விரல் விடு தூதாய் இணையத்தில் இணைந்து உங்கள் இதயத்தில் கலக்கட்டும்

இயற்கை ( Iyarkkai )

"இயற்கைக் கூட கற்பிழந்தவள்தான்
கவிஞர்களால் நிதமும் ருசிக்கப்படும் போது!"

Thursday, April 22, 2010

தனிமை ( Thanimai )

இன்பத்திலெல்லாம் என்னுடன் ஊடல் கொண்டு பிரிந்துவிடும் தனிமை
துன்பத்தில் மட்டும் என்மீது காதல் கொண்டு இணைகிறது!
இறக்கும் வரை எனக்குத் துணையாய் என் துணைவியாய்
எப்போதும்
என்னுடன்
என் தனிமை!