Thursday, April 29, 2010

உறக்கம் ( Urakkam)

கருமை சுமந்த இரவு,
குளிர் சுமந்த காற்று,
ஒப்பனையில்லா அம்புலியின் அழகு,
தெளிவில்லா தெருவிளக்கின் ஒளி,
கம்பளியின் அரவணைப்பு,
தாய்மடியாய் தலையணைகள்,
அத்தனையும் ரசித்தபடி
கண்ணில் வரும் உறக்கம்
மண்ணில் இருளருளிய சுவர்க்கம் !

தமிழெந்தன் தாய் ( Tamil Enthan Thaai)



தமிழுக்கு இதமென்று பேர் !
இன்பத் தமிழெந்தன் இதயத்தில் இரக்கத்தின் தூண் !

 தமிழுக்கு சேய் என்று பேர் !
அன்னைத் தமிழ் இந்த குழந்தைக்கு அமுதூட்டும் தாய் !

தமிழுக்குக் கனியென்று பேர் !
அன்புத் தமிழ் எங்கள் கவிதைக்குப் பசிதீர்க்கும் ஊண் !

தமிழுக்கு இசையென்று பேர் !
சங்கத் தமிழெந்தன் குரலுக்கு ஒலிமீட்டும் நாண் !

 தமிழுக்குச் சுடர் என்று பேர் !
வளர்த் தமிழெங்கள் அறியாமைக் குளிருக்குத் தீ !

 தமிழுக்குப் புனல் என்று பேர் !
செந்தமிழெங்கள் வறட்சிக்கு கார் தந்த நீர் !

தமிழுக்குக் கொடையென்று பேர் !
தொன் தமிழெங்கள் கருத்துக்குப் பதம் தந்த கோன் !

தமிழுக்கு மதியென்று பேர் !
கன்னித் தமிழெங்கள் இருளுக்கு ஒளிதந்த கோள் !

Monday, April 26, 2010

விடியல் ( Vidiyal )

பச்சைப் புல்வெளி
ஆங்கே பரவிய பனித்துளி!
மிடிமையிடத்து மீண்ட வெள்ளொளி!
அடிமையறியா பறவையின் பாட்டொலி!
பரிதியின் படுக்கையாய்
பரந்த பேராழி!
விடியலின் வினோதங்கள்
விரியுலகில் எத்தனை ஆயிரங்கள்!

Saturday, April 24, 2010

இரக்கம் ( Irakkam )

இறந்தவர் தேகம் இடுகாடு செல்லும்முன் 
இரக்கமின்றி மறக்கும் மனம் - இதில் 
அன்பென்றும், காதலென்றும் வெளிப்பூச்சுகள் 
துருக்களை மறைக்கும் தூரிகைகளோ!
துன்பங்கள் துளிர்க்க ஈரமில்லா இதயங்களில் 
இன்பங்கள் மட்டும் இறக்கும்வரை இருந்திடுமோ! 

Friday, April 23, 2010

மழை ( Mazhai )

"இருட்டிய வானம்
 திரட்டிய துளிகளை 
 உருட்டி தெளிக்கிறது 
 அட்சதையாக!"

மதி ( Mathi )


           "அரைத் திங்கள் வளரினும்
            அரைத் திங்கள் குறையினும்
            வீசும் ஒளியில் மாசில்லா கவிஞர்களின் ரதி - இவள்
            புவிக்கு ஞாயிறுவின் இரவு பிரதி!"

Thursday, April 22, 2010

தனிமை ( Thanimai )

இன்பத்திலெல்லாம் என்னுடன் ஊடல் கொண்டு பிரிந்துவிடும் தனிமை
துன்பத்தில் மட்டும் என்மீது காதல் கொண்டு இணைகிறது!
இறக்கும் வரை எனக்குத் துணையாய் என் துணைவியாய்
எப்போதும்
என்னுடன்
என் தனிமை!