Wednesday, July 28, 2010

காதல் தோல்வி ( Kathal tholvi )

காற்றில் விதை தூவி
வெந்நீர் தனை ஊற்றி 
பஞ்சு வேலியிட்டு
நெஞ்சில் உரமிட்டு
பார்த்து வளர்க்காது 
உயிர் சேர்த்து வளர்த்த பயிராம் - காதல் 
இதில் மன்னவரும் மகுடமிழக்க 
விண்ணவரும் வீண் பகை சுமக்க 
பின்னவராய் நாம் மட்டும் என்ன விதி விலக்கோ ?
மனக்காதல் மணக்காததால்
மணக்காது போகும் பெண்ணை 
கண்கள் இமைக்காமல் கண்ட 
நிலைக்காதல் நினைக்காது நீக்கிடுமோ ?
நெஞ்சு பொறுக்குதில்லையே 
நம் உயிரென நினைந்தவள் உதறிடும்போது....
புற்றரவு தீண்டிடினும் 
கொடும் நஞ்சு சுவைத்திடினும்
மனம் பெற்றிடுமோ உற்ற உன்னை இழந்த வலி ?
இறக்கும் வரை இவ்வலியை இழி மரணமும் கொணர்வதுண்டோ? 
இறந்தாயினும் ஓர் வழியில் இரு மனமும் புணர்வதுண்டோ?
என்னை இறத்து உன்னை மறக்க 
உன் நினைவை மண் புதைக்க
கோழை போல் இறக்கமாட்டேன்...
கொண்ட உயிர் துறக்கமாட்டேன்...



Wednesday, July 21, 2010

தமிழிசை ( Tamilisai )


போதி னிதழு மிசையூ தலில் விரிந்திட !
காதின் மடலு மசையா தலில் மகிழ்ந்திட !
வாதி னுடலி லசைந்தாடிடும் கொடியேன - உளம்
தீதின் பிரிவை வசை பாடி நெகிழ்ந்ததுவே !


( பொருள் விளக்கம்: போது - மலரும் நிலையிலுள்ள மொட்டு, அத்தகைய மொட்டானது தமிழின் இசையை கேட்டு இன்பத்தில் விரிந்திட, காதின் மடலானது அசையாதிருந்து இசையின் லயத்தில் மூழ்கிட, தென்றல் தீண்ட கிளையின் உடலில் பிணைந்த கொடியினது (வாது - கிளை) சிலிர்த்த அசைவைப்போல் உள்ளமானது இசையை அனுபவித்து தீமையின் பிரிவை வசை பாடி நெகிழ்ந்ததுவே...)

Saturday, July 17, 2010

பிரிவு ( Pirivu )

                    
உன்னோடு நானிருந்த நாட்கள்
     விண்ணோடு நான் பறந்த நாட்கள் !
இன்னொடு இசைப் புனைந்த பாக்கள்
     தன்னோடு உனைவரைந்த தாட்கள் !
கருவிழி கரைகிற போதும்
     கசடாய் கசிந்திடும் காதல் !

                
இருவிழி இசைந்திட கேட்கின் 
     எளிதாய் கிடைத்திடும் சாதல் !
மண்ணை உடல் கலக்கும் போதும் 
     என்னை உடல் விடுத்துச் செல்லும் !
நின்னது என்னுயிர் என்று
     நின்னுயிர் எடுத்துச் சொல்லும் !


Thursday, July 1, 2010

பெண்ணுரிமை ( Pennurimai )

வெறும் ஏட்டிலும் பாட்டிலுமா பெண்ணுரிமை ?
நம்நாட்டிலும் பண்பாட்டிலும் நடைமுறையில் எங்குண்டு அவர்க்குரிமை ?

வன்கொடுமை தான்செய்யினும் வாய்திறவா பதுமையென வணங்கி நிற்கும் கற்சிலையோ?
பேருந்தின் இருக்கையிலும் பேறு விடுதியிலும் சலுகை பெற்றதுதான் அவள் நிலையோ?

உயர்ச் சாதிவெறியன் கூறுகிறான் - தாழ்ந்த சாதியில் ஆண் நாய் வளர்க்க அனுமதி இல்லையென்று !!!
எங்கள் பெண்டிர் உமக்கு நாயைவிட அற்பமோ? இழிவு ஏற்கும் சொற்பமோ?

பெண்களின் சுயவளர்ச்சி சமுகத்தின் நீசமோ?
அன்னையை நிதமும் நிந்தித்தல்தான் நீ விரும்பும் தேசமோ?
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் நற்குணங்கள் அவளை பூசிக்கவோ? இல்லை ஈசிக்கவோ?

விரல் நெட்டி முறிக்கவும், மணமெட்டி சுமக்கவும்தான் பெண் அவனியில் பிறந்தாளோ?
முட்டுக் கட்டை கட்டியவர்தம் முதுகுப்பட்டை பொடிபட எட்டி உதைக்க மறந்தாளோ?

பெண்டறிவு ஓங்குதல் கண்டு சீற்றமோ?
ஆணென்னும் ஆதிக்க உணர்வின் ஏற்றமோ?
அடிமை நாயாய் பணிந்து கிடத்தல்தான் பெண்ணினத் தோற்றமோ?

என்னில் பாதி அவளென்னும் உண்மை மனம் ஏற்குமோ?
பேசும் அஃறிணைதான் பெண்ணென்று ஓதி பேதம் பார்க்குமோ?

ஆணிற்கழகு பெண்மையை போற்றுதல் அல்லாலன்றி தூற்றுதல் என்றும் ஏற்பதற்கிழிவே.