Friday, August 27, 2010

அன்னையாய் பிறந்திட அருந்தவம் ஆற்றிடல் வேண்டும்



உயிரைச் சுமக்கும் உன்னதம் அவளை கடவுள் என்பான் நாத்திகன் கூட !
உயிரும் மெய்யும் உடன் வரும் அஃகும் உறுப்பாய் உரித்த தமிழினைப் போல 
கருவில் உயிரையும் உருவில் மெய்யையையும் உளத்தில் எஃகையும் அணியாய்ப் புனைந்தவள். 
உருக்கும் இசையில் சிந்தும் அவளே !
பெருக்கும் இன்பத்தில் கந்தும் அவளே !
வெண்ணெய்த் தின்கையிலும், வெறும் வயிற்றில் துயில்கையிலும்
அன்னையுந்தன் அதட்டல் சத்தம்
முன்னுக்குப்பின் முரணாய் இருக்கும்.
உண்ணும் பருக்கையில் எல்லாம் உன்முகமே தெரியுதம்மா !
உப்பும், புளி மிளகும் கலந்த ருசி - உன் உள்ளங்கைக்கு உரியதம்மா ! 
ஏழு மலைத் தங்கங்கள் இழந்தாலும் பெரிதில்லை 
அன்னை உந்தன் அரவணைப்பில் ஆறுதல் கிடைத்துவிட்டால் - 
ஆயிரம் சொர்க்கங்கள் காலடியில் கிடக்குமம்மா !
சுட்ட பால் குவளை தொட்டுவிட்டேன் சிறுவயதில் 
எட்ட நின்றிருந்த நீயதனைப் பார்க்கவில்லை. 
சுட்டு விரல் தனிலே கொடும் சூட்டை உணர்ந்தவுடன்   
கத்தி அளப்பரித்தேன், அழுகையிலே உனையழைத்தேன்.  
உயிரினை இழக்கும் வலி உன்கண்ணில் பார்த்திட்டேன், 
நீ துடித்த துடிப்பினிலே என் வலியை மறந்திட்டேன். 
தீக்குழம்பை குடிதாற்போல் நீ துடித்த அந்நொடிகள்
நினைத்தாலும் வலிக்கிறது, இருந்தாலும் இனிக்கிறது...
"பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா" என்றான் பாரதி,
இப்பிள்ளைக்கு கனியமுதே என்அம்மா  -
தீந்தமிழின் தீராக் கவிகளிலும், வற்றா வரிகளிலும் 
உனை வர்ணித்துப் புகழ்ந்தாலும் பத்துமா பதங்கள் 
என் பத்திரை மாற்றுத் தங்கமே உனை வாழ்த்த?
கருப்பை எனக்கிருந்தால் மறுமையில் உன்னை ஈன்றிருப்பேன்,  
ஆணாய்ப் பிறந்ததினால் அப்பலனும் எனக்கில்லை !
இம்மைப் பிறப்பினையும் குறையுரைக்க ஏதுமில்லை - ஏனெனில்
குருதிப் பாலையும் தசையுள்ள தலையணையும் 
உன்மடியில் கண்டதனால் உன்னதமே இப்பிறப்பும் !

Monday, August 16, 2010

இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart )


செத்ததடி என் நெஞ்சம்
பித்தனாய் உன் பின்னே அழைந்ததும்,
மெத்த நறுமண சோலைக்குள்
முத்தக்காடாய் உன் கன்னம் ஆக்கியதும்,
எத்தனை முறை நினைந்திருப்பேன்!
அத்தனையும் பொய்யோடி ?
தத்தையுனக்குத் திருமணமாம் - உன்
அத்தையவள் உரைக்கக் கேட்டேன். 
மத்தை தயிரில் கடைந்தது போல் 
சித்தம் முழுதும் கலைந்ததடி - உடல் 
இரத்தம் கணத்தில் உறைந்ததடி
இத்தனை பொழுதும் இசைந்த காதல்
நித்தமும் நிறைவாய் மிளிர்ந்த காதல் 
தத்தனை மறந்து உயிர்த்திடுமோ ?
ஒத்த நினைவுகள் மறத்திடுமோ ?
கொத்து மலர்களை அடைந்த வண்டாய் - உல
கத்தை மறந்து லயித்த மனம் - மடிய 
நைத்ததடி உன் மணநாள் செய்தி...
வைத்த விழி கலையாமல் உன்னழகை 
ருசித்த தளிரிதயம் - இன்று குற்றூசி 
தைத்த கொடுவலி யுணர்ந்ததடி 
வித்தகியென்றே உனை வியந்துரைப்பேன் செல்லமாய்-இன்று 
வித்தாகி விட்டாயோ நம்மின்னுறவை மற்றோனுக்கு ?
குத்தமுனையுரைக்க ஒப்பவில்லை மனம் - எனினும் 
சுத்தக் குருதியில் தீச்சாறு கலந்தாற்போல் - இம்மையின் 
மொத்த வினை வலியும் ஒருசேர்ந்தெனை கொல்லுதல் உணர்வாயோ ?

Sunday, August 15, 2010

காதல் கவி ( Poet for Love )

காதல் கவி எழுதிட கரமிரண்டும் துடிக்குதடி 
மனம் ஏனோ மறுக்கிறது 
கசங்கும் காகிதத்திலா கண்மணியின் கவியென்று...
உயிரில் எழுதிடவோ ? உத்தரவு நான் கேட்டேன் 
மனம் ஏனோ மறுக்கிறது
பிரியும் உயிரிலா பிரியமானவளின் கவியென்று...
உடலில் எழுதிடவோ ? உத்தரவு நான் கேட்டேன்
மனம் ஏனோ மறுக்கிறது
எரியும் உடலிலா என்னவளின் கவியென்று...
கண்ணில் எழுதிடவோ ? 
கண்ணீர் வந்தழித்திடுமே !
விண்ணில் எழுதிடவோ ?
மேகம் வந்து மறைத்திடுமே !
மண்ணில் எழுதிடவோ ?
மகத்துவம்தான் குறைந்திடுமே !
எழுதுகோல் உயிர் நீத்ததடி 
என்னிலை காணச் சகியாமல்...

Saturday, August 7, 2010

திரிபு ( Distortion )

ஆரத் தழுவி 
முத்தம் பகிர்ந்து 
அங்கம் அளந்து
இதழ் வருடி 
சிகை கோதி 
நகை ரசித்து 
கரவிரல்கள் இருபதும் இறுகக் கோர்த்து 
காதல் பதங்கள் ஆயிரம் மொழிந்து 
இன்தமிழில் செவ்வழகை ஒப்பனை பெருக்கி வர்ணித்து 
இல்லறத்தில் இன்பம் காணும் ஒவ்வொரு நொடியிலும் எங்கோ ஓர் மூலையில் எட்டிப் பார்க்கும் முன்பு உதிர்ந்த காதலின் நினைவுகள் - முள் நீக்கிய பின்பும் பாதம் கொள்ளும் சிறு வலி போல்...