Wednesday, June 29, 2011

கதம்பம்


***என்னை சுற்றி இருக்கும் அனைத்தையும் நான் வெறுக்கிறேன் என்றால் உண்மையில் நான் என்னை வெறுக்கிறேன் என்றுதான் பொருள்***

***கவலை என்பதே இல்லாத ஒரு உலகத்தில் "நான் இன்பமாய் வாழ்கிறேன்" என்று சொல்லுதல்கூட ஒரு முட்டாள்தனம்தான்***

***என்னை நிராகரிப்போர் ஒவ்வொருவரையும் முழுதாய் சபிக்கத் தோன்றுகிறது, எனினும் காரணமற்ற நிராகரிப்பை நொந்து சபிக்ககூட சக்தியற்று போகிறது மனம்***

***ஜனனத்தின் துவக்கத்தை தெரிந்துகொள்ள ஞானமில்லை...
மரணத்தின் துவக்கத்தை தெரிந்துகொள்ள நாமே இல்லை***

***ஆறுதல் மொழியும் ஒவ்வொருவரும் இழப்புகளை மறக்கச் சொல்கிறார்கள்;
காலமென்னும் கருப்புத்துணியால் கண்ணீரை மறைக்கச் சொல்கிறார்கள்;
மறக்கவும், மறைக்கவும்தான் மனமென்றால்
மனம் உண்மையில் மனமல்ல நினைவுகளை புதைக்கும் மயானம்***

***நான் அதிகம் ஆசைபடுவதில்லை, ஆனால் அதிகம் எதிர்பார்க்கிறேன்.
ஏமாற்றத்தின் வெப்பத்தில் என் எதிர்பார்ப்புகள் கருகும்போதுதான்
மனம் தெளிந்து உணர்கிறது ஆசையின் பிரதியே எதிர்பார்ப்பென்று***

***என்னோடு நானும்,
என்னோடு பிரிவும்
எப்போதும் பிரிவதில்லை***

***மகிழ்ச்சியாய் வாழ தத்துவங்களை படியுங்கள், ரசியுங்கள், உணருங்கள், பின்பற்றாதீர்.***

***ஒரு தங்கையிடம் தமையன் தாயாகிறான்.
ஒரு தம்பியிடம் தமக்கை தந்தையாகிறாள்.
நான் பல தங்கைகளுக்குத் தாய்... நீங்கள்?***

***தேடாமல் கிடைப்பது நட்பு
தேடியே தொலைவது காதல்
தொலைந்தபின் தேடுவது வாழ்க்கை
வாழ்ந்தே தொலைவது விதி !!!***

***மன்னிப்பின் மகத்துவம் தரும்போதைவிட பெறும்போதுதான் அதிகம் உணர்த்தப்படுகிறது***

***இருப்பவனுக்கு அலட்சியம்
இழந்தவனுக்கு வலி
இல்லாதவனுக்கு ஏக்கம்
மனமென்னும் பெட்டகத்தில் சாவியற்ற பூட்டாய் மேற்கூறிய மூன்றும்***

***முதலில் இருப்பதை கொடுங்கள்,
பிறகு இல்லாததை உருவாக்குங்கள்***

***நட்பின் செறிவும், சரிவும் பிரிவில்தான் விளங்குகிறது....***

***வருடம் மட்டுமே ஒவ்வொரு வருடமும் பிறக்கின்றது, ஒவ்வொரு வருடமும் இறக்கின்றது***

***அன்று என் தனிமைக்குத் துணையாய் சில கண்ணீர் நினைவுகள்,
இன்று அத்துணையை இழந்து தனிமையில் என் தனிமை***

***இருள் மட்டுமே உறக்கத்தை கொணர்வதில்லை.
இடையறாத உழைப்பும்,
இனிய நல்லுணவும்,
இன்பம் நிறைந்த மனமும்,
இரைச்சலற்ற சூழலும்,
இணைந்து வருகையில்
இமைகள் உறக்கத்தை நோக்கி
இறுகுதல்
இயல்பே***

*** எனது சுட்டு விரல் என்னை நோக்கி திரும்பும்போது நான் நல்லவனா? என்ற கேள்வி எனக்குள் 
எழுந்தாலும் நல்லவன்தான் என்று அதற்கு முன்பே பிறரிடம் வாதாடத் துவங்குகிறது 
என் மனம்*** 

***துன்பம் இல்லா துறவி
பெண்கள் இல்லா பிறவி
இவை கேட்பதற்கு இனிது ஆனால் வாழ்வதற்கு கொடிது***

***தீமை தாமாய் நிகழும், நன்மையை நிகழ்த்தத்தான் நாம் தேவை***

***துன்பம் என்பது துளிர்த்து வளரும் செடியல்ல... அது ஒரு கோடை மழை... ***

***நெரித்துக் கொல்ல நினைக்கும் சில நினைவுகள் எப்போதும் இறப்பதில்லை... நேர்மறை எதிர்மறை இரண்டும் இதனுள் அடங்கும்...***
 
 
***பழகுவதற்கு முன் பெண்ணை ஆணும்
பழகிய பின் ஆணை பெண்ணும்
மதிப்பதில்லை***

***கேட்காமல் கிடைத்தல் கொடுப்பினை, கேட்டுப் பெறுதல் பிச்சை.
உங்களுக்கான அன்பு கொடுப்பினையாக கிடைக்கட்டும், பிச்சையாக கிடைத்தல் வேண்டாம்.
பிறர் வெறுப்புக்கு மட்டுமே உள்ளாகும் இதயம் இறப்பெனும் இயற்கையோடு இணைதலே மேல்***

***மனிதம் மறந்து மிருகம் வளர்தற்கு எளிதாய் கிடைக்கும் இரையும் ஒரு காரணம்***

***சறுகுகள் என்றும் மிதிபடும் போதுதான் கவனத்தை ஈர்க்கின்றன***

***அழகு ரசிக்கப்படலாம், கவரப்படலாம்... ஆனால் அது ஒரு போதும் நிரந்தரத்தை தீர்மானிப்பதில்லை***

***வெகு சீக்கிரத்தில் வெறுக்கப்படுபவர்கள் வெளிப்படையாய் உள்ளவர்கள்தான்***

***பொதுவான நாகரீகம் வரையறுக்கப்படும் வரையில் அநாகரீகம் என்பதற்கு நடைமுறையில் அர்த்தமில்லை***

***ஒரு சிந்தனைவாதியின் சேமிப்பு கணக்கில் அதிகம் இருக்க வேண்டிய செல்வம் நேரம் மட்டும்தான்***

***மனம் என்னும் சவவெளி - புதைக்கப்பட்ட நினைவுப் பிணங்களை புதுப்பிக்கத் தோண்டுகையில் இன்பத்தின் நறுமணத்தை விட துன்பத்தின் துர்நாற்றமே அதிகம் வீசுகிறது... பிணம் என்று மணந்தது இன்று மணப்பதற்கு***

***வெறுமை சுமந்த உள்ளத்தின் கவிதை
                                        வெற்றுக் காகிதம்!***

 ***கானல் நோக்கி தாகத்துடன் பயணம்
         நாணலாய் இருந்த வாழ்க்கை துறந்து***