Wednesday, May 16, 2012

நான் + நாம் = நீ





தலைவன்:

மனப்பெட்டகத்தில் இட்டநின் னகத்தை இன்று தட்டத் துணிந்தணன் உளம் பட்டத் துயரத்தால்...

உனை காணும் கணம் யாவும் கன்னல் கட்டுண்டு கனிச்சாறு பருகிடும் மனம் - உனை நீங்கும் கணம் யாவும் கடும் நஞ்சுண்டு கனல் பருகிடும் தினம்...
                
நிறை குடமாய் தழும்பும் என் காதலுக்கு உறைவிடமாய் உன் உளம் வேண்டும்...உலகம் அதிர காதல் உரைத்து உள்ளம் வழிய அன்பை நிறைத்து காலம் மறந்து கலக்க வேண்டும், காற்றுப் படகில் மிதக்க வேண்டும்...

உன்னோடு நான் கலந்து நாமாதல் போய் என்னோடு நாம் கலந்து நீயாதல் வேண்டும்...

குவளைப்பூ நுதல் விரிந்த நன்மணம் நின் இன்பதில் கேட்டு என்மனம் கொளல் வேண்டும்...

இன்மனத்தில் இருப்பவை இவையென்று உரைத்துவிட்டேன்... தயவுகூர்ந்து மறுப்பாயெனில் மறுப்பேனென உரையாமல் இறப்பாய் என உரை...


தலைவி: 

மடம் தொழும் மடந்தை இவள். உடன் பிறந்த தமையன் சொலும், உற்றார் சொலும், உறவினர் சொலும் மறவாது நடப்பவள் நான்.
      
பெற்றோர்தனுக்கு பெருந்துயர் தொடுக்கும் இக்காதலை உற்றேனெனில் உலகு பழிக்கு உள்ளாவர் எந்தையும் தாயும்....

மறுப்பேனென நானுரைத்தால் இறப்பேனென சொல்லும் நினக்கு உயிர் என்பது ஊதல் காற்றோ ?

அழகு கொழிக்கும் இவ்வளமை கரைய, இளமை கரைய நின் காதலும் கரையும் பார்....



தலைவன்:

வளமை கரைய, இளமை கரைய அகவை கரையலாம்...
இரவு கரைய, நிலவு கரைய நினைவு கரையலாம்...
கனவினோடு உறங்கும் நாளில் உணர்வு கரையலாம்....
கடுங்கடலின் ஆற்றல்தனில் உலகும் கரையலாம்...
உடல் கரைய, உயிர் கரைய உளக் காதல் கரையுமோ ?
நிதம் கரைக்கும் விதம் கரைக்க மனக் காதல் குறையுமோ?

உந்தையும் தாயும் உனை நொந்து தலைசாய உந்துவேனோ உன்னை நான் ?
உலகோர் பழிக்க உன்னுள்ளம் வதைத்து நினைசேர ஒப்புமோ நெஞ்சம் எனக்கு ?


உற்றார் உறவினர் புடைசூழ நின் தமையன் அணிவித்த மோதிர விரல் கொண்டு வெண்மெட்டி மென்விரல் மாட்டி, கண்பறிக்கும் பன்வண்ண மாலை சூட்டி, மங்கல மஞ்சள் கயிற்றை நின் நெஞ்சில் படர காதல் நிறைத்து இறுகப் பூட்டி, என் மனம் சேர்த்து நின்னை எந்தன் மனையாள் ஆக்குவேன்...
விதியின் வன்மையால் பிறன் மனையாள் நீயானால்
என் மனை துறப்பேன், மனை நிலம் துறப்பேன், ஊர் துறப்பேன், உறை துறப்பேன், உறவு துறப்பேன், உயிர் வளர்க்கும் உண்டி துறப்பேன், நட்பு துறப்பேன், நகை துறப்பேன், நல்லுடை துறப்பேன், உடல் மெலிந்து தசை துறப்பேன். இவை கடந்தும் உயிர் மீந்தால் இறுதியாக அதையும் துறப்பேன்....

தலைவி:

இத்தனை துறக்க நின்மனம் ஒப்பும்போது இத்துணை துறக்க ஒப்புமோ மனம் எனக்கு ?

வெண்மெட்டியும், மெத்த நன்மாலையும், மஞ்சள் தோய்த்த மங்கலக் கயிறும்  உனையன்றி வேறொன் சூட்ட இனியும் விடுவேனோ ?
பிறவரன் தோளில் மாலையிடுவேனோ ?
இனி உன்னில் துவங்கி உன்னில்தான் முடியும் எனதுயிர்...

மூத்தோர் சம்மதியில் மணநாளில் இணைவோம்
முற்றாத காதல் நிறைத்து புது வாழ்வை புனைவோம்....

No comments:

Post a Comment