Friday, August 27, 2010

அன்னையாய் பிறந்திட அருந்தவம் ஆற்றிடல் வேண்டும்



உயிரைச் சுமக்கும் உன்னதம் அவளை கடவுள் என்பான் நாத்திகன் கூட !
உயிரும் மெய்யும் உடன் வரும் அஃகும் உறுப்பாய் உரித்த தமிழினைப் போல 
கருவில் உயிரையும் உருவில் மெய்யையையும் உளத்தில் எஃகையும் அணியாய்ப் புனைந்தவள். 
உருக்கும் இசையில் சிந்தும் அவளே !
பெருக்கும் இன்பத்தில் கந்தும் அவளே !
வெண்ணெய்த் தின்கையிலும், வெறும் வயிற்றில் துயில்கையிலும்
அன்னையுந்தன் அதட்டல் சத்தம்
முன்னுக்குப்பின் முரணாய் இருக்கும்.
உண்ணும் பருக்கையில் எல்லாம் உன்முகமே தெரியுதம்மா !
உப்பும், புளி மிளகும் கலந்த ருசி - உன் உள்ளங்கைக்கு உரியதம்மா ! 
ஏழு மலைத் தங்கங்கள் இழந்தாலும் பெரிதில்லை 
அன்னை உந்தன் அரவணைப்பில் ஆறுதல் கிடைத்துவிட்டால் - 
ஆயிரம் சொர்க்கங்கள் காலடியில் கிடக்குமம்மா !
சுட்ட பால் குவளை தொட்டுவிட்டேன் சிறுவயதில் 
எட்ட நின்றிருந்த நீயதனைப் பார்க்கவில்லை. 
சுட்டு விரல் தனிலே கொடும் சூட்டை உணர்ந்தவுடன்   
கத்தி அளப்பரித்தேன், அழுகையிலே உனையழைத்தேன்.  
உயிரினை இழக்கும் வலி உன்கண்ணில் பார்த்திட்டேன், 
நீ துடித்த துடிப்பினிலே என் வலியை மறந்திட்டேன். 
தீக்குழம்பை குடிதாற்போல் நீ துடித்த அந்நொடிகள்
நினைத்தாலும் வலிக்கிறது, இருந்தாலும் இனிக்கிறது...
"பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா" என்றான் பாரதி,
இப்பிள்ளைக்கு கனியமுதே என்அம்மா  -
தீந்தமிழின் தீராக் கவிகளிலும், வற்றா வரிகளிலும் 
உனை வர்ணித்துப் புகழ்ந்தாலும் பத்துமா பதங்கள் 
என் பத்திரை மாற்றுத் தங்கமே உனை வாழ்த்த?
கருப்பை எனக்கிருந்தால் மறுமையில் உன்னை ஈன்றிருப்பேன்,  
ஆணாய்ப் பிறந்ததினால் அப்பலனும் எனக்கில்லை !
இம்மைப் பிறப்பினையும் குறையுரைக்க ஏதுமில்லை - ஏனெனில்
குருதிப் பாலையும் தசையுள்ள தலையணையும் 
உன்மடியில் கண்டதனால் உன்னதமே இப்பிறப்பும் !

4 comments:

  1. அன்னையும் பிதாவும் முன்நெறி தெய்வம் என்ற அவ்வையார் அவர்களின் வாக்குப்படி பெற்ற தாய் தந்தையரை பேணிக்காக்கும் பிள்ளைகளை மனதார வாழ்த்துகிறேன்.


    அதே சமயம் மிகவும் கஷ்ட்டப்பட்டு வளர்த்த தாய் தந்தையரை முதியோர் இல்லத்திலோ அல்லது அநாதையாகவோ விட்டு விட்டு கோவில் கோவிலாக கும்பிடப்போகும் சுயநலவாதிகளுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் உங்கள் தாய் தந்தையருக்கு இன்று செய்வது போல் நாளை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகள் செய்வார்கள் என்பது நிச்சயம்.

    http://kallimalar.blogspot.com/2010/07/blog-post.html

    ReplyDelete
  2. உங்கள் படைப்புகளை வரவேற்கிறேன் ..தொடரட்டும்
    http://www.raghuvarman.co.cc/

    ReplyDelete
  3. பாஸ் என்கிற சுபாஷ்September 6, 2010 at 7:38 AM

    இது போன்ற அருமையான படைப்புக்களை தொடரவும், நட்பை பற்றி ஒரு படைப்பு எழுதுக

    ReplyDelete
  4. vairamuthu anal vayadhu 25(ranjith)

    ReplyDelete